நம்பியூர் அருகே பரபரப்பு; கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை; விடிய விடிய தேடுதல் வேட்டை- தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை


நம்பியூர் அருகே பரபரப்பு; கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை; விடிய விடிய தேடுதல் வேட்டை- தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2022 2:13 AM IST (Updated: 6 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்ததால் விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நம்பியூர்
நம்பியூர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்ததால் விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சிறுத்தையின் வேட்டை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளையும், அருகே உள்ள செட்டியம்பதி பகுதியில் 2 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டி.என்.பாளையம் வனத்துைறக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய அந்த பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. 
ஆனால் பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி கொள்ளும் சிறுத்தை இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்களை இரவில் நடமாடக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்தனர். 
பொதுமக்கள் பார்த்தனர்...
இந்தநிலையில் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் கிராமத்தில் பொன்காத்த அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் குளக்கரையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சத்தம் வந்த இடம் அருகே சென்று பார்த்தபோது சற்று தூரத்தில் சிறுத்தை நடமாடுவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீடுகளுக்கு ஓடிவந்துவிட்டார்கள். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். 
தகவல் கிடைத்ததும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன், வனத்துறை மருத்துவர் சதாசிவம் மற்றும் வன ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். சிறுத்தை நடமாடிய குளத்தின் அருகே சென்று அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை பார்த்து அது சிறுத்தையின் கால்தடம்தான் என்பதை உறுதி செய்தார்கள். உடனே அந்த பகுதியில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. 
தண்டோரா அறிவிப்பு
இதைத்தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலரை வனத்துறையினர் உதவிக்கு அழைத்துக்கொண்டு டார்ச்லைட் மற்றும் பேட்டரி விளக்குகளை கைகளில் வைத்தபடி கிராமம் முழுவதும் தேடினார்கள். அப்போது கிராமமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று காலை 2-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. பொன்காத்த அய்யன் கோவில் குளம் உள்ள பகுதியில் வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று தேடினார்கள். மேலும் ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் எங்கு உள்ளது என்று கண்காணித்து வருகிறார்கள். கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை 2 நாட்களாக எங்கு பதுங்கி உள்ளது என்று தெரியாததால் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இ்ந்தநிலையில் பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி கருக்குபாளையம்புதூர் தொடக்கப்பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில்  நடமாட்டமா?
இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள ஏளுர் கிராமத்தில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதி மக்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை இருகாலூர் கிராமத்தில் இருந்து சிறுத்தை திருப்பூர் மாவட்ட பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது அது வேறு சிறுத்தையா? என்று தெரியவில்லை. திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் ஏளூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் புகுந்த சிறுத்தை திருப்பூர் நகருக்குள் நுழைந்தது. அதை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story