வனப்பேச்சி அம்மன் கோவில் பூஜையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
தளவாய்புரம் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவில் பூஜையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். வீடுகளில் கண் விழித்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவில் பூஜையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். வீடுகளில் கண் விழித்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
சிறப்பு பூஜை
தளவாய்புரம் அருகே முகவூர் கிராமத்தில் இந்து நாடார் சமூகம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு சிறப்பு பூஜை வழிபாடு நடத்துவது வழக்கம். விவசாயம் செழிக்க அருள்புரிந்த அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அப்போது பெண்கள் வீட்டில் இருந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு இந்த பூஜை வழிபாடு இங்கு நேற்று மாலை தொடங்கியது. இதனால் இங்குள்ள தெருக்களில் ஆண்கள் உள்ளே செல்ல தடுப்பு பலகை அமைக்கப்பட்டது.
அம்மன் பாடல்கள்
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ஆண்கள் ஊருக்குள் வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவில் வீடுகளிலும், தெருக்களிலும் பெண்கள் மட்டும் இரவு முழுவதும் விழித்திருந்து அம்மன் பாடல்களை பாடிக்கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆண்கள் வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலில் இரவு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினார்கள். இதனையொட்டி முகவூர் பகுதியிலிருந்து தேவதானம் சாஸ்தா கோவில் பகுதிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
Related Tags :
Next Story