குடியரசு, சுதந்திர தின விழாக்களில் அம்பேத்கரின் உருப்படத்தை வைப்பது கட்டாயம் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மாநிலம் முழுவதும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களில் அம்பேத்கரின் உருவப்படத்தை கட்டாயம் வைக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
அம்பேத்கர் உருவப்படம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு விழாக்களில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதேபோல் கடந்த மாதம்(ஜனவரி) 26-ந் தேதியும் குடியரசு தினத்தன்று நடந்த அரசு நிகழ்ச்சிகளில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல் ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அம்பேத்கரின் உருவப்படத்தை ஊழியர்கள் வைத்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா, அம்பேத்கரின் உருவப்படத்தை அப்புறப்படுத்தினால்தான் தேசிய கொடியை ஏற்றுவேன் என்று விடாப்பிடியாக கூறினார். அவரது உத்தரவின்பேரில் ஊழியர்கள் அம்பேத்கரின் உருவப்படத்தை அங்கிருந்து அகற்றினர். அதன்பிறகு நீதிபதி மல்லிகார்ஜுனகவுடா தேசிய கொடியை ஏற்றினார்.
ஆலோசனை கூட்டத்தில் முடிவு
இந்த நிலையில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதி மல்லிகர்ஜுனகவுடா மீது நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு பதிவாளர் சிவசங்கரகவுடா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் குடியரசு தின விழாவில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் அந்த கோர்ட்டின் நீதிபதி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி மல்லிகர்ஜுனகவுடா மீது நடவடிக்கை எடுக்கும்படி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், இனி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் குடியரசு மற்றம் சுதந்திர தின விழாக்கள் கொண்டாடும்போது கட்டாயம் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செய்யவேண்டும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியும் உத்தரவிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story