ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47). விவசாயியான இவர் தனது ஆடுகளை தினமும் தனது வீட்டு அருகில் உள்ள உறவினரான சங்கரின் பட்டியில் கட்டி வைப்பது வழக்கம். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து அவர் பார்த்தபோது 2 பேர் அவர்களது ஆடுகளை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர். இது பற்றி சங்கரிடமும் சேகர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உடையார்பாளையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை, காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இதையறிந்து சேகரும், சங்கரும் நேற்று உடையார்பாளையம் ஆட்டுச்சந்தைக்கு சென்றுள்ளனர். அங்கு 2 வாலிபர்கள், திருடப்பட்ட ஆடுகளை விற்க நின்று கொண்டிருந்ததை கண்டனர். இதையடுத்து அந்த வாலிபர்களை மடக்கி பிடித்த அவர்கள், ஆடுகளையும், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி மீன்சுருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அந்த வாலிபர்கள் மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த குருநாதனின் மகன் அஜித்குமார்(வயது 24), மகாராஜனின் மகன் பாலாஜி(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story