குமரியில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்


குமரியில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்
x
தினத்தந்தி 6 Feb 2022 3:55 AM IST (Updated: 6 Feb 2022 3:55 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்

நாகர்கோவில்:
குமரியில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
1,324 வாக்குச்சாவடிகள்
குமரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 233 வாக்குச்சாவடிகளும், 4 நகராட்சிகளுக்கு உட்பட்ட 99 வார்டுகளில் 140 வாக்குச்சாவடிகளும், 51 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 828 வார்டுகளுக்கு 951 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் கண்காணிப்பு
வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மொத்தம் உள்ள 1,324 வாக்குச்சாவடிகளில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நடைபெறும் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
8 மையங்கள்
இதையடுத்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. அதற்கான அறைகள் அமைக்கும் பணியும், அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தடுப்புகள்- மின்விளக்குகள்
இந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கும் பணியும், மின் விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியிலும் நேற்று தடுப்புகள் அமைக்கும் பணி நடந்தது.

Next Story