மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்


மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2022 5:02 PM IST (Updated: 6 Feb 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின்பேரில் மூடப்பட்டது.

சென்னையை அடுத்த ஆலந்தூரில், பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே இருந்த மதுபான கடை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின்பேரில் மூடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் வேறு ஒரு இடத்தில் மீ்ண்டும் மதுபான கடை திறக்கப்பட இருப்பதாக தகவல் பரவியது.

இந்த பகுதியில் ரெயில் நிலையம், பள்ளிக்கூடம், கோவில் ஆகியவை இருப்பதால் மீண்டும் இங்கு மதுபான கடையை திறக்க கூடாது எனக்கூறி இந்திய தவ்ஹீத் ஜமாத், த.மு.மு.க., தமிழக தவ்ஹீத் ஜமாத், எஸ்.டி.பி.ஐ., ம.ஜ.க. உள்பட முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் செய்யது அலி தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பிர்தவுஸ், யாசர் அரபாத், இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் சுக்கு அலி, அஜ்மல், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மாலிக், ஜாகீர், ம.ஜ.க. நிர்வாகி பாரூக் உள்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது, இன்ஸ்பெக்டர் ஜெரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். “உங்கள் கோரிக்கையை ஏற்று மதுபான கடை அகற்றப்பட்டது. மீண்டும் இங்கு மதுபான கடை திறக்கப்படாது. அப்படி கடை திறந்தால் முதல் ஆளாக வந்து நானே பூட்டு போடுவேன்” என உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story