திருத்தணியில் 11 அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுவை நிராகரிக்க முயன்றதால் பரபரப்பு; தி.மு.க.வினர் வாக்குவாதம்
திருத்தணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 11 அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுவை தி.மு.க.வினர் நிராகரிக்க கூறி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.வினர் வாக்குவாதம்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது. திருத்தணி நகராட்சியில் 21 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளிலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்பாளர்களுக்கு முன்மொழிந்த அரசு பதிவு பெற்ற வக்கீலின் பதவி காலம் கடந்த ஆண்டு முடிவுற்றதாகவும், இதனால் அவர் முன்மொழிந்த 11 அ.தி.மு.க. வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமஜெயத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் மனு ஏற்பு
இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த 11 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.பி.கோ.அரி, தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் அரசு பதிவு பெற்ற வக்கீல் நோட்டரி முன்மொழிந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிராகரிக்க கூடாது என்றும், அரசு பதிவு பெற்ற வக்கீலாக 2026-ம் ஆண்டு வரை தொடரலாம் என்ற அரசு ஆணையை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுட்டிகாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த 11 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க திருத்தணி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணித் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story