காருக்குள் டீக்கடைக்காரர் மூச்சுத் திணறி சாவு
காருக்குள் டீக்கடைக்காரர் மூச்சுத் திணறி சாவு
காங்கேயத்தில் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில் நிறுத்தி இருந்த காருக்குள் டீக்கடைக்காரர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
காருக்குள் மயங்கி கிடந்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உடையார் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் வயது30. இவர் காங்கேயம்- கோவை சாலையில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே இந்த பழக்கதில் இருந்து விடுபட மறுவாழ்வு இல்லத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட்டார். இவர் நேற்று முன்தினம் இரவு காரில் மகேந்திரன் வெளியே சென்றார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி, மகேந்திரனின் செல்போனில் தொடர்பு கொண்டு இரவு 10.15 மணிக்கு பேசி உள்ளார். அப்போது விரைவில் வீட்டிற்கு வந்து விடுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் காங்கேயம்-தாராபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு மகேந்திரன் ஓட்டிச்சென்ற கார் நிற்பதாகவும், காருக்குள் மயங்கிய நிலையில் மகேந்திரன் கிடப்பதாகவும் அங்கிருந்தவர்கள் மகேந்திரனின் உறவினர்களுக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காரின் கண்ணாடிகள் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து காரின் கண்ணாடிைய போலீசார் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகேந்திரன் வாயில் ரத்தம் கசிந்த நிலையில் மகேந்திரன் குப்புறமாக கிடந்துள்ளார்.
மூச்சுத்திணறி சாவு
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மகேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதிகமாக மதுகுடித்த நிலையில் காருக்குள் உட்கார்ந்திருந்த போது கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால் போதிய அளவில் காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story