நிலக்கடலையில் உலர்வேர் அழுகல் நோய் தாக்குவதை கட்டுப்படுத்துவது எப்படி?
நிலக்கடலையில் உலர்வேர் அழுகல் நோய் தாக்குவதை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
நீடாமங்கலம்:
நீ்டாமங்கலம் வேளாண்மை விஞ்ஞானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் தாக்குதல் உள்ளது. இந்த நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி காலங்களிலும் வரக்கூடியது. நோயின் ஆரம்ப கட்டத்தில் தண்டு பகுதிக்கு மேல் செம்பழுப்பு நிறத்தில் நீர் கோர்த்தது போல புள்ளிகளை காணலாம். நாளடைவில். இந்த புள்ளிகள் தண்டுக்கு கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் பரவும். எனவே செடிகள் வாட ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி அதை பிடுங்கும் போது மிக எளிதில் வரும். இந்த நோயானது விதை மற்றும் மண் மூலம் பரவக்கூடியது.
விதை விதைப்பதற்கு முன்பு பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிரியல் நோய் எதிரி காரணி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் உபயோகப்படுத்த வேண்டும். பயிர் சுழற்சி முறையில் நிலக்கடலை அல்லாத குடும்ப பயிர்களை பயிர் செய்ய வேண்டும். செயற்கை பூஞ்சான் கொல்லியான கார்பன்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட செடி மற்றும் அருகில் உள்ள செடிகளுக்கு மண்ணில் நனையும்படி ஊற்ற வேண்டும். இதன் மூலம் நிலக்கடலையில் உலர் வேர் அழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story