‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ஜே.ஜே.நகர் கிழக்கு காலனியில் உள்ள மின்கம்பத்தில் சுவிட்சு பெட்டி சேதமடைந்து மிகவும் தாழ்வாக உள்ளதாக, முருகேசுவரி என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று பிரசுரமானது. இதையடுத்து அந்த சுவிட்சு பெட்டி உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையின் பின்புறம் உள்ள பூங்கா, கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. அங்குள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அருண், பாளையங்கோட்டை.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
மானூர் அருகே தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவில் தொடக்கப்பள்ளி அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சேதமடைந்து பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே உள்ளது. அங்குள்ள மின்மோட்டாரும் பழுதடைந்துள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு, புதிய தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளை வேண்டுகிறேன்.
- முகம்மது நிஜாம், தெற்குப்பட்டி.
சுகாதார வளாகம் கட்டப்படுமா?
திசையன்விளை அருகே நவ்வலடி பஸ் நிறுத்தம் அருகில் சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. திசையன்விளையில் இருந்து அஞ்சுகிராமம், கூத்தங்குழி, விஜயாபதி, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறவர்கள் நவ்வலடி வந்து, நாகர்கோவில்- தூத்துக்குடி பஸ்சில் மாறி செல்கின்றனர். நவ்வலடியில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுப்பிரமணியன், நவ்வலடி.
சாலையை அகலப்படுத்த வேண்டும்
மூலைக்கரைப்பட்டியில் இருந்து கூந்தன்குளத்துக்கு செல்லும் சாலை குறுகலானதாக உள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் எதிரெதிரே வந்தால், ஒதுங்குவதற்கு வழியில்லாததால் நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பிரசித்தி பெற்ற கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வதால், சாலையை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், கடம்பன்குளம்.
சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டி
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அலுவலகம் எதிரே சாலையோரம் உள்ள குடிநீர் வால்வு தொட்டியின் காங்கிரீட் மூடி சேதமடைந்துள்ளது. அதன் அருகில் பஸ் நிறுத்தம், அரசு மருத்துவமனை உள்ளதால், அந்த வழியாக ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குடிநீர் வால்வு தொட்டிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வால்வு தொட்டிக்கு புதிய காங்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- திருக்குமரன், கடையம்.
உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
தூத்துக்குடி அருகே தெய்வசெயல்புரம் பைபாஸ் ரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் அமைந்துள்ள இப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அங்கு இரவில் சாலையை கடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கு அமைத்து விபத்துகளை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கிருஷ்ணவேணி, தெய்வசெயல்புரம்.
சேதமடைந்த சாலை
நாசரேத் அருகே வெள்ளமடத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. விவசாய பணிகளில் ஈடுபடும் டிராக்டர்களில் இரும்பாலான உழவு சக்கரங்களை கழட்டாமலே சாலைகளில் ஓட்டிச் செல்வதால் புதிய சாலைகளும் உடனே சேதமடைகின்றன. இதனால் வாகன விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- ஜம்பு, பண்டாரபுரம்.
மயானத்துக்கு சாலை வசதி தேவை
ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வு கிராமத்தில் மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமான பாதையிலும், ஓடை தண்ணீரில் நடந்தும் மயானத்துக்கு செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மயானத்துக்கு செல்ல சிமெண்டு சாலை அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகசிகாமணி, மருதன்வாழ்வு.
பழுதடைந்த அடிபம்பு
உடன்குடி பண்டாரவிளை தெருவில் விநாயகர் கோவில் அருகில் உள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே காட்சிப்பொருளான அடிபம்பை பழுது நீக்கி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீராம், உடன்குடி.
Related Tags :
Next Story