பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி கண்ணோட்டம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி உள்ளது.
கிருஷ்ணராயபுரம்
வானம் பார்த்த பூமி
பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தை சோழர்கள் ஆட்சி செய்தனர் என்பதற்கு ஆதாரமாக ஊர் பெயரிலேயே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் என பெயர் அமைந்துள்ளது. மேலும் இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஆளவந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியை பொருத்தவரை வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளது.
மழை பெய்தால்தான் விவசாயப்பணிகளே நடைபெறும். இங்கு கால்நடை வளர்ப்பு, கூலி வேலையை நம்பித்தான் பொதுமக்கள் உள்ளனர். பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஊராட்சியாக இருந்து கடந்த 1982-ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மண்புழு உரம்
இது 16.45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த பேரூராட்சியில் ஒரு வருவாய் கிராமம், 11 குக்கிராமங்கள் அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 7,971 ஆகும். இதில் ஆண்கள் 3,988, பெண்கள் 3,983 ஆவர். பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். பேரூராட்சியில் வீடுதோறும் குப்பை சேகரிக்க வண்டிகளும், லாரிகளும் தேவையான அளவில் உள்ளதாக தெரிகிறது. பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான 50 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
பேரூராட்சியில் காவிரி குடிநீர் இன்னும் சரிவர கிடைக்கவில்லை. எனவே புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளுக்கும் காவிரி குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல பேரூராட்சியில் மருத்துவமனை வசதிகள் இல்லை. பொதுமக்கள் அவசரத்திற்கு என கோவக்குளம் அல்லது கரூருக்கு தான் செல்ல வேண்டும்.
எனவே பேரூராட்சியில் மருத்துவமனை வசதி செய்து தரப்பட வேண்டும். மேலும் பேரூராட்சியாக இருந்தும் தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. எனவே அரசு சார்ந்த வங்கியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story