தேங்கி கிடக்கும் கழிவு நீரால் பயணிகள் அவதி
மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலைய நுழைவாயிலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அவற்றை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலைய நுழைவாயிலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அவற்றை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காமராஜா் பஸ் நிலையம்
மயிலாடுதுறை நகரில் 2 பஸ் நிலையங்கள் இருந்தாலும், பிரதான பஸ் நிலையமாக காமராஜர் பஸ் நிலையம் இருந்து வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார், மணல்மேடு உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் அனைத்து பஸ்களும் புறப்படுகின்றன.
அதோடு சென்னை, பெங்களூர், திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களும் காமராஜர் பஸ் நிலையத்துக்குதான் வந்து செல்கின்றன. ஆகையால் இந்த பஸ் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் காமராஜர் பஸ் நிலையத்திற்கு சென்று பயணம் செய்து வருகின்றனர்.
கழிவுநீா் வெளியேறி வருகிறது
பயணிகளின் வசதிக்காக இந்த பஸ் நிலையத்திற்குள் ஓட்டல்கள், டீக்கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் கழிவுநீர் அனைத்தும் குழாய்கள் மூலம் பஸ் நிலையத்தின் நுழைவாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு காந்திஜி சாலையில் உள்ள பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இணைக்கப்பட்டுள்ளன.
பஸ் நிலையத்தில் இருந்து கழிவுநீர் கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நுழைவாயில் அருகே உள்ள வால்வு பகுதியில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பஸ் நிலைய வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் சென்று வர முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனா்.
தொற்று நோய் பரவும் அபாயம்
மேலும் இங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பஸ் நிலையத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி மீண்டும் சாலையில் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story