ஆற்காடு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


ஆற்காடு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2022 11:58 PM IST (Updated: 6 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆற்காடு

ஆற்காடு அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதை ஆக்கிரமிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் மேட்டுத்தெரு பகுதி வழியாக ஒரு பாதை உள்ளது. அந்த இடத்தை ஒருவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் கடந்த சில ஆண்டுகளாக அந்த வழியாக மயானத்திற்கு செல்வதற்கும், அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்தப்பாதை வழியாக யாரும் செல்லமுடியாத வகையில் தனிநபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென தடுப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். 
சாலை மறியல்

அவரது இறுதி சடங்கு நேற்று மாலை நடத்துவதற்கு ஏதுவாக பொது பாதையில் இருந்த தடுப்புகளை அகற்றும்படி தனி நபரிடம் கிராமமக்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் தடுப்பை அகற்ற மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தாழனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story