நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.
புதுக்கோட்டை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 4-ந் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 189 பதவிகளுக்கான தேர்தலில் 1,114 மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் 1,095 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இதில் வேட்பாளர்கள் யாரேனும் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய தாள் அச்சிடும் பணி நடைபெறும். அடுத்தக்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவை பொருத்தும் பணி நடைபெறும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story