மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்- பயணிகள்


மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்- பயணிகள்
x
தினத்தந்தி 7 Feb 2022 12:35 AM IST (Updated: 7 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை-காரைக்குடி வரை இயக்கப்பட்டு வரும் டெமு ரெயிலை, பயணிகள் ரெயிலாக மாற்றி, மதுரை வரை போக்குவரத்தை நீட்டித்து தரவேண்டும் என தென்னக ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி:-

மயிலாடுதுறை-காரைக்குடி வரை இயக்கப்பட்டு வரும் டெமு ரெயிலை, பயணிகள் ரெயிலாக மாற்றி, மதுரை வரை போக்குவரத்தை நீட்டித்து தரவேண்டும் என தென்னக ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை- காரைக்குடி

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக காரைக்குடி வரை ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்க தலைவர் மெய்ஞானமூர்த்தி, செயலாளர் பழனிவேல், பொருளாளர் கணேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி நடராஜன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்ட தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-

பயண நேரம் குறைப்பு

பட்டுக்கோட்டை-பேராவூரணி வழியாக காரைக்குடி வரை உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியில், தற்போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் திருவாரூர்- காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ‘டெமு’ ரெயிலின் பயண நேரம் 3½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் கூடுதலாக 2 விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். விரைவு ரெயிலை பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்.

மதுரை வரை...

ரெயில்வே நிர்வாகம் வாரம் 3 முறை இயக்க திட்டமிட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில், வாரம் இருமுறை செல்லும் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரெயில் ஆகியவற்றையும் உடனடியாக இயக்க வேண்டும்.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மதுரை செல்லும் ரெயிலை திருவாரூர் - பட்டுக்கோட்டை- பேராவூரணி - அறந்தாங்கி காரைக்குடி வழியாக இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் ‘டெமு’ ரெயிலை சாதாரண ரெயிலாக மாற்றி பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்கவும், இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story