முயல் வேட்டையாடிய 3 பேர் கைது


முயல் வேட்டையாடிய 3 பேர் கைது
x

இரவு நேரத்தில் தலையில் டார்ச் லைட் பொருத்தி முயல் வேட்டையாடிய 3 பேரை பூதப்பாண்டி வனத்துறையினர் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி:
இரவு நேரத்தில் தலையில் டார்ச் லைட் பொருத்தி முயல் வேட்டையாடிய 3 பேரை பூதப்பாண்டி வனத்துறையினர் கைது செய்தனர்.
வனப்பகுதியில்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சரகத்திற்கு உட்பட்ட பணகுடி சிவகாமிபுரம் வனப்பகுதியில் ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. 
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவை தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் சிவகுமார் மேற்பார்வையில் வனவர்கள் மணிகண்டன், ரமேஷ், வன காப்பாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, முத்துராமலிங்கம், பிரதீபா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சூறாவளி ஓடை என்னும் இடத்தில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
முயல் வேட்டை
அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் 3 பேர் வனப்பகுதியில் சுற்றியதை வனத்துறையினர் கண்காணித்தனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த போது, தலையில் டார்ச் லைட் பொருத்திய நிலையில் இருந்தனர். மேலும் கையில் வேட்டையாடிய 2 முயல்களும் இருந்தன.
பின்னர் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா கடையாலுருட்டியை சேர்ந்த மாரிஸ்குமார் (வயது 27), கண்ணன் (27), சபரிராஜா (26) ஆகிய 3 பேர் முயல் வேட்டையாடியது தெரிய வந்தது.
மேலும் பிடிபட்ட சபரிராஜா பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதும், மற்ற 2 பேரும் இவருடைய உறவினர்கள் என்பதும், இரவு நேரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதோடு, மற்றவர்களுக்கு அதனை பகிர்ந்து கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதனையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 
வேட்டையாடிய முயல்கள், வேட்டைக்கு பயன்படுத்திய டார்ச்லைட், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு 3 பேரையும் வனத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story