காட்டன் சிட்டியில் வெல்லப்போவது யார்?
80 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜபாளையம் நகராட்சியான காட்டன் சிட்டியில் வெல்லப்போவது யார் என போட்டி நிலவுகிறது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 2 முதல் -அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் பி.எஸ்.குமாரசாமி ராஜா. மற்றொருவர் பெருந்தலைவர் காமராஜர். இதில் பி.எஸ்.குமாரசாமி ராஜா சொந்த ஊர் ராஜபாளையம்.
அவர் தனது நிலத்தை தானமாக அளித்த இடத்தில் தான் ராஜபாளையம் நகராட்சி கட்டிடமே நிமிர்ந்து நிற்கிறது. இதனாலேயே அந்த கட்டிடத்திற்கு பி.எஸ்.குமாரசாமி ராஜா மகால் என்ற பெயரும் வந்தது. இந்த கட்டிடத்தை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது திறந்து வைத்தது பெருமைக்குரியது. எனவே நகராட்சி தேர்தலை ராஜபாளையம் சந்திக்க இருக்கும் இந்த ேநரத்தில் அந்த இரு பெரும் தலைவர்களை இந்த நேரத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும். ராஜபாளையம் நகராட்சி தமிழகத்தில் உள்ள பெரிய நகராட்சிகளில் ஒன்றாகும். 42 வார்டுகள் உள்ளன. கிட்டத்தட்ட 1 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர்.
விவசாயம், நெசவு இ்ந்த பகுதியில் சிறந்து விளங்குகிறது. அதிலும் பேண்டேஜ் துணி தயாரிப்பில் சிறப்பு பெற்று விளங்குகிறது. பருத்தி நன்றாக இங்கு விளைவதால் ராஜபாளையத்திற்கு காட்டன் சிட்டி என்று சிறப்பு பெயரும் உண்டு.
1894-ம் ஆண்டு ராஜபாளைம் 9 வார்டுகள் கொண்ட பஞ்சாயத்தாக இருந்துள்ளது. 1941-ம் ஆண்டு 18 வார்டுகள் கொண்ட நகரசபையாக தரம் உயர்த்தப்பட்டது. 1941 முதல் 1947 வரை 5 ஆண்டுகள் பி.ஏ.சி ராமசாமி ராஜா நகர சபை தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர் அழகிரி ராஜா, துரைசாமி ராஜா, ராமசாமி மூப்பனார், அர்ஜூன ராஜா, சங்கர் ராஜா ஆகிேயார் நகரசபை தலைவராக இருந்தனர். 20 ஆண்டுகள் காங்கிரஸ் தொடர் வெற்றி பெற்று ஏ.ஏ. சுப்பராஜா நகரசபை தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர் ராஜபாளையம் நகர் மன்றம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டு நகர் மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரத்தினம்மாள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நகர் மன்றம் கலைக்கப்பட்டு 2008-ம் ஆண்டு மறு தேர்தலில் மகாலட்சுமி என்பவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011 வரை தலைவராக இருந்தார். அதன் பிறகு 2011 முதல் 2016 வரை ராஜபாளையம் நகராட்சி அ.தி.மு.க. வசம் இருந்தது. அப்போது தனலட்சுமி நகர சபை தலைவராக இருந்தார்.
தற்போது நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் களம் காண்பதால் ராஜபாளையம் நகரசபை தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என கடும் போட்டி நிலவுகிறது.
அய்யனார்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஆறாவதுமைல் என்னும் இடத்தில் 2 குடிநீர் தேக்கம் உள்ளது. இந்த குடிநீர் தேக்கத்தில் இருந்து தான் நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ராமசாமி ராஜா
விவசாயத்தை நம்பி இருந்த ராஜபாளையத்தை தொழில் நகரமாக மாற்றி பஞ்சாலை உற்பத்தியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பெருமை ராம்கோ பஞ்சாலை நிறுவனங்களையே சாரும். அத்துடன் மட்டுமின்றி இந்த நிறுவனம் ராமராஜ் சர்ஜிகல் காட்டன் மில்ஸ் என்ற பேண்டேஜ் நிறுவனத்தையும் தொடங்கியது. ராஜபாளையத்தில் முதன்முதலாக பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை ஆரம்பித்த பெருமை ராம்கோ நிறுவனங்களையே சாரும். ராம்கோ நிறுவனங்களின் ஸ்தாபகர் ராமசாமி ராஜா பிறந்த ஊர் ராஜபாளையம். விருதுநகர் மாவட்ட தொழில் வளர்்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ராஜபாளையம் பி.ஆர். ராம சுப்பிரமணிய ராஜா.
எதிர்பார்ப்பு
ராஜபாளையத்தில் ெரயில்வே மேம்பால பணிகளை விைரந்து முடிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், அரசு கலைக்கல்லூரி, தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழைய, புதிய பஸ்நிலையங்களை பராமரித்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு தலைவர்களின் நடை பயிற்சியின் போது உருவான குடிநீர் திட்டம்
1949-ம் ஆண்டு காமராஜரும், பி.எஸ்.குமாரசாமிராஜாவும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி வரை நடைபயணம் ேமற்கொண்டனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் செல்லும் நீரை பருகினர். அப்போது காமராஜ், குமாரசாமிராஜாவிடம் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது. ஆதலால் இ்ந்த நீரை வீணாக்க வேண்டாம். இந்த நீரை நகர மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தினால் நல்லது என கூறியுள்ளார். இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் நகர குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம் ஆறாவது மைல் என்ற இடத்தில் நீர் தேக்கம், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நகர்ப்பகுதியில் 3 பெரிய குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு 1963-ம் ஆண்டு ராஜபாளையம் நகருக்கு முதன்முதலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் தேக்கத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் உள்ள நகருக்கு மின்சாரம் இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரசியங்களில் சில...
* மிக கம்பீரமான தோற்றத்தை உடைய ராஜபாளையம் நாய் இனங்கள் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். வேட்டைக்கு சென்றால் சிறுத்தையை கூட எதிர்த்து நிற்கும் வல்லமை பெற்றது என்று அதன் சிறப்பை கூறுகிறார்கள்.
* மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஏராளமான விளைநிலங்களில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் “ராஜபாளையம் பஞ்சவர்ணம்” என்ற ரக மாம்பழம் ராஜபாளையத்திற்கும் ேமலும் பெருமை சேர்க்கிறது. சப்பட்டை என்ற ரகமும் ராஜபாளையத்திற்கு அடையாளத்தை வாங்கி கொடுத்துள்ளது.
* ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 1,16,130 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 56,458, பெண்கள் 59,660, இதரர் 12 பேர்.
* ராஜபாளையத்தில் 1900-ம் ஆண்டு கால கட்டத்தில் வணிக முயற்சியாக பருத்தி விதைகள் பயிரிடப்பட்டது. ராஜபாளையத்தில் பருத்தி நன்றாக விளைந்து காட்டன் சிட்டி என பெயர் பெற்றது. இதனால் பருத்தி சார்ந்த பல பெரிய தொழிற்சாலைகள்1936-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மேலும் மருத்துவம் சார்ந்த பேன்டேஜ் துணி உற்பத்தியும் பெருகியது.
* ராமசாமி மூப்பனார் நகரசபை தலைவராக இருந்த கால கட்டத்தில் ராஜபாளையம் நகர் மன்ற அலுவலக கட்டிடம் அன்றைய சென்னை ராஜ்ய முதல்-மந்திரி காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
80 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜபாளையம் நகராட்சியான காட்டன் சிட்டியில் வெல்லப்போவது யார் என போட்டி நிலவுகிறது.
Related Tags :
Next Story