கர்நாடகத்தில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
தற்காப்பு குணம்
சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒபவ்வா தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அங்குள்ள மரக்கன்றுக்கு நீர் ஊற்றி அந்த பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தற்காப்பு அனைத்து உயிரினங்களின் குணம் ஆகும். இறைவன் தற்காப்பு என்ற குணத்தை நமக்கு வழங்கியுள்ளார். முதலில் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். தற்காப்புக்கு தன்னம்பிக்கை தான் முக்கியமான தேவை. அப்போது தான் தற்காப்பை சரியான முறையில் கற்றுக்கொள்ள முடியும்.
மதுக்கர் நாயக்கர்
சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் விடுதிகளில் தங்கி படிக்கும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒபவ்வா பெயரை சூட்டியுள்ளோம்.
மதுக்கர் நாயக்கர் கோட்டையில் இருந்து ஹைதர் அலி படையின் 200 வீரர்களை வீரமாக சண்டை போட்டு கொன்றார். இத்தகைய பலத்தை கொண்டது தான் கர்நாடகம். நாட்டிற்காக கித்தூர் ராணி சென்னம்மா போராடினார். மல்லம்மா, ஒனக்கே ஒபவ்வா உள்ளிட்ட பல பெண்கள் வீரதீரத்துடன் போராடியுள்ளனர்.
ராணுவத்திற்கு இணையான பயிற்சி
நமது நாட்டை கட்டமைக்க பொருளாதாரம் தேவை. அதே அளவுக்கு நமக்கு உந்துசக்தி முக்கியம். எந்த நாட்டிற்கு நல்ல வரலாறு உள்ளதோ அந்த நாடு சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும். நல்ல பணிகளை நாம் நினைத்து கொள்வது நமது இயல்பு. நமது மண்ணில் பிறந்து வீரமாக போராடியவர்களை பாராட்டுவதில் நாம் சற்று பின்தங்கி இருக்கிறோம்.
கன்னடத்தின் வரலாற்றை மீண்டும் புதுப்பித்து அதன் மூலம் அடுத்து வரும் தலைமுறைக்கு உந்துசக்தியை ஏற்படுத்த முயற்சி செய்யும் நேரம் தற்போது வந்துள்ளது. நான் பதவி ஏற்ற கடந்த 6 மாதங்களில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி சாதனை புரிந்துள்ளோம். சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாளை நாங்கள் சிறப்பாக கொண்டாடினோம். இதையொட்டி 44 ஆயிரம் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. அவர்களுக்கு ராணுவத்திற்கு இணையான பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
பாடம் புகட்ட முடியும்
உலக்கையையே ஆயுதமாக பயன்படுத்தியவர் ஒபவ்வா. அதனால் நமது தினசரி பணிகளுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களையே தற்காப்புக்கு பயன்படுத்த முடியும் என்பதை ஒபவ்வா நிரூபித்துள்ளார். கர்நாடகத்தில் 12 போலீஸ் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய கவுரவம் உள்ளது. ஆனால் சில விஷமிகள், பெண்களை, குழந்தைகளை பார்க்கும் பார்வை மோசமாக உள்ளது. இதனால் பல பெண்கள் கொல்லப்பட்டனர். இதை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு தற்காப்பு கலை தெரிந்தால், எத்தகையவர்களுக்கும் சரியான பாடம் புகட்ட முடியும். அதற்காக சட்டத்துறை, கல்வித்துறை மற்றும் சமூகம் போன்ற அனைத்து பிரிவுகளும் பெண்களை பாதுகாக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பெண்களின் உயிர் மற்றும் கவுரவத்தை காக்க அரசு தயாராக உள்ளது.
சிறப்பு திட்டம்
கர்நாடகம் முன்னேறி வரும் மாநிலம். இங்கு சட்டம்-ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு ஒரு சிறப்பு திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை விரைவில் அறிவிப்போம். நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் தற்சார்புடன் வாழ்ந்தால் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story