சென்னிமலை வனப்பகுதியில் திடீர் தீ- 5 ஏக்கர் பரப்பளவிலான செடி-கொடிகள் எரிந்து நாசம்


சென்னிமலை வனப்பகுதியில் திடீர் தீ- 5 ஏக்கர் பரப்பளவிலான செடி-கொடிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 Feb 2022 2:47 AM IST (Updated: 7 Feb 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது.

சென்னிமலை
சென்னிமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது.
திடீர் தீ
சென்னிமலையில் காங்கேயம் செல்லும் ரோட்டில் கணுவாய் பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு காய்ந்து கிடந்த செடி, கொடிகள், புற்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ பரவிய சில இடங்களில் கரடு, முரடான பாதையாக இருந்ததால் அங்கு தீயணைப்பு வண்டி செல்ல முடியவில்லை. அதனால் அங்கு தீயணைப்பு வீரர்கள் இலை, தழைகளை கொண்டு சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
5 ஏக்கர் நாசம்
தீ பரவிய இடத்தின் அருகில் உள்ள பசுவபட்டி ஊராட்சி திருவள்ளுவர் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்தப் பகுதிக்கு தீ பரவாமல் இருக்கவும் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள வறண்ட செடி, கொடிகள் மற்றும் புல், பூண்டுகள் ஆகியவை எரிந்து சாம்பல் ஆனது.
தீ விபத்து நடந்த இடத்துக்கு சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அந்த வழியாக சென்ற யாரோ பீடி, சிகரெட் பிடித்துவிட்டு வீசிய நெருப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Next Story