பர்கூர் மலை கிராமத்தில் பழங்கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் திப்பு சுல்தான் காலத்து நடுகற்கள்- அழியாமல் பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
பர்கூர் மலை கிராமத்தில் பழங்கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் உள்ள திப்பு சுல்தான் காலத்து நடுகற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்
பர்கூர் மலை கிராமத்தில் பழங்கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் உள்ள திப்பு சுல்தான் காலத்து நடுகற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பர்கூர் மலைப்பகுதி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பர்கூர் மலைப்பகுதி. தமிழக-கர்நாடக எல்லையான பர்கூரில் மேற்கு, கிழக்கு, நடுமலை பகுதியில் 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள நெல்லூர் பாலாற்றின் கரையோரம் ராமாயணத்தில் புகழ்பெற்ற ஆரவல்லி சூரவல்லி கோட்டை அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சங்ககால பெருமை வாய்ந்ததாக பர்கூர் மலைப்பகுதி விளங்கி வருகிறது.
நடுகற்கள்
இதில் ஒந்தனை என்ற மலைகிராமத்தில் நடுகற்கள் அமைந்துள்ளன. ஒரு வீரர் புலியின் வாயில் வலது கையை விட்டு இடது கையால் வாளால் குத்திக்கொல்வது போன்ற நடுகல், பெண் ஒருவர் புலியை முறத்தால் அடித்து விரட்டும் நடுகல், பக்தியை வெளிப்படுத்த கூடிய நந்தி சிற்பம், சிவலிங்க சிற்பம் உள்பட 15-க்கும் மேற்பட்ட நடுகல் சிற்பங்கள் உள்ளன.
இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வீரத்தை, பக்தியை பறைசாற்றும் வகையிலும், பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையிலும் காணப்படுகிறது. இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘இந்த நடுகற்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தான் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.’ என்றனர்.
பாதுகாக்க கோரிக்கை
இங்கு ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை அன்று மலைவாழ் மக்கள் வந்து பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். இதுதவிர இந்த நடுகற்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு-கர்நாடகா மாநில மலைவாழ் மக்கள் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே பழமையான திப்பு சுல்தான் காலத்து நடுகற்களையும், மதில் சுவர்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்கள்.
Related Tags :
Next Story