இருசக்கர வாகன பெட்டியில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா?
இரு சக்கர வாகன பெட்டியில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
நாகர்கோவில்:
இரு சக்கர வாகன பெட்டியில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்க இருக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
அதைத்தொடர்ந்து வேட்பாளர்்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடக்கிறது.
தீவிர சோதனை
இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் மற்றும் மதுபானங்கள் வினியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்துக்கு 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதே போல குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகளுக்கு தலா 3 வீதம் 12 பறக்கும் படைகளும், பேரூராட்சிகளில் ஒரு பேரூராட்சிக்கு ஒரு பறக்கும் படை வீதம் 51 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இருசக்கர வாகனங்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் பறக்கும் படையினர் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். கார்கள், சரக்கு வாகனங்களில் நடைபெற்று வந்த சோதனை தற்போது இருசக்கர வாகனங்களிலும் நடந்து வருகிறது.
நாகர்கோவிலில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் தெருத்தெருவாக சென்று அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை தடுத்து தீவிர சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுபோன்று நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். வாகன சோதனையின் போது மதுபானங்கள், பரிசு பொருட்கள் மற்றும் உாிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story