சென்னை மேற்கு முகப்பேரில் ஆடிட்டர் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
சென்னை மேற்கு முகப்பேரில் ஆடிட்டர் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மேற்கு முகப்பேர், கார்டன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அகமது ஷெரீப் (வயது 60). ஆடிட்டராக உள்ளார். நேற்று காலை இவரது வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு தீப்பிடித்து எரிந்தது.
வீட்டில் இருந்த அகமது ஷெரீப், அவருடைய மனைவி நாகமுனிஷா மற்றும் சகோதரி மலிதா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
நொளம்பூர் போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இதனை கவனிக்காமல் பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து சிதறி, தீ விபத்து ஏற்பட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்த சத்தம் அரை கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாகவும், அந்த அதிர்வில் அருகில் இருந்த கடை, வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story