இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடையும் பெரியகுளம்
இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடையும் பெரியகுளம்
உடுமலை அருகே உள்ள பெரியகுளம் கரைப்பகுதியில் குப்பைகள், இறைச்சிக்கழிவுகள்மற்றும் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பெரிய குளம்
உடுமலை அருகே உள்ள போடிபட்டி அண்ணாநகரை அடுத்து தளிசாலையில் இருந்து வாளவாடிக்கு பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெரியகுளம். இந்த பகுதியில் உள்ள குளங்களில் பெரியது இந்த குளம்தான். இந்தகுளத்தின் கரைப்பகுதி சுமார் 2கி.மீ.நீளம் இருக்கும். இந்த குளக்கரைக்கு அருகில்தான் வாளவாடிக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை வாளவாடி, அம்மாபட்டி, வடபூதிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த குளம் நிறைந்தால் தளிசாலை-வாளவாடி சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும்.
குப்பைகள், இறைச்சி கழிவுகள்
பி.ஏ.பி.பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில், உபரிநீர் வெளியேறும் பகுதியில் குப்பைகள்மற்றும் கோழி இறைச்சிக்கழிவுகள் ஆகியவை கொட்டப்படுகின்றன. அவ்வப்போது குப்பைகளுக்கு தீயும் வைக்கப்படுகிறது. அங்கு காலி மதுபாட்டில்களும் குவிந்து கிடக்கிறது. அதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த குளத்தில் இருந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக ஆங்காங்கு 9 மதகுகள் உள்ளது. இந்த குளத்தின் கரையில் மதகுகள் பகுதியில் மதுப்பிரியர்கள் உட்கார்ந்து மதுகுடித்துவிட்டு காலிமதுபாட்டில்களை போட்டு விட்டு செல்கின்றனர். சிலர் பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர்.
போதையில் தகராறு
மாலை நேரங்களில் சிலர் மது போதையில் வாளவாடி சாலைப்பகுதியில் தள்ளாடியபடி செல்வதாகவும், சிலர் இருசக்கர வாகனத்தில் வருகிறவர்களை வழிமறித்து மதுபோதையில் தகராறு செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதனால் குளம் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், குளக்கரை பகுதியில் மதுப்பிரியர்கள் உட்கார்ந்து மது அருந்திவிட்டு சாலையில் செல்கிறவர்களுடன் தகராறு செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story