வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானை


வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானை
x
தினத்தந்தி 7 Feb 2022 6:59 PM IST (Updated: 7 Feb 2022 6:59 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் வாழைகளை காட்டுயானை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கூடலூர்

முதுமலையில் வாழைகளை காட்டுயானை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பசுந்தீவன தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என இருவேறு காலநிலைகள் நிலவுகிறது. 

மேலும் வனம் பசுமை இழந்து வருகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சூழல் உருவாகி இருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் முதுமலை ஊராட்சி பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

அட்டகாசம்

இந்த நிலையில் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பிக்குன்னு கிராமத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து குலைகளுடன் கூடிய வாழைகளை சரித்து போட்டு தின்று அட்டகாசம் செய்தது. 

இதில் மனோஜ் உள்பட பல விவசாயிகளின் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் வருவதற்குள் வாழைகளை காட்டுயானை சேதப்படுத்தியது.

உரிய இழப்பீடு

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுயானையை விரட்டியடித்தனர். தொடர்ந்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பல மாதங்களாக தொடர் பராமரிப்பு மேற்கொண்டதால் குலைகளுடன் வாழைகள் வளர்ந்து இருந்தது. சில வாரங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் காட்டு யானை முழுமையாக சேதப்படுத்தி விட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் கூறினர்.


Next Story