மாணவர் சேர்க்கை தொடக்கம்


மாணவர் சேர்க்கை தொடக்கம்
x
தினத்தந்தி 7 Feb 2022 7:26 PM IST (Updated: 7 Feb 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 16 பேர் சேர்ந்தனர்.

ஊட்டி

ஊட்டி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 16 பேர் சேர்ந்தனர்.

மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடந்த மாதம் 12-ந் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த கல்வி ஆண்டு முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 150 இடங்கள் ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

கல்லூரியில் இன்னும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதனால் தற்காலிகமாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்காக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இருக்கைகள் போடப்பட்டு டீன் அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

16 பேர் சேர்ந்தனர்

மாணவர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் உள்ள மலை மேலிட பயிற்சி முகாம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி விடுதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அங்கு வகுப்புகள் நடத்தவும், மாணவர்கள் தங்கவும் அடிப்படை வசதிகளுடன் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் 12 பேர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 4 பேர் என மொத்தம் 16 பேர் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர தேர்வு செய்து உள்ளனர்.

3 பாடப்பிரிவுகள்

இவர்கள் சேர்க்கை ஆணையை காண்பித்து கல்லூரியில் சேர்ந்து கொண்டனர். இதில் ஒருவர் நீலகிரியை சேர்ந்த மாணவி ஆவார். தொடர்ந்து அகில இந்திய பிரிவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவு வாரியாக கலந்தாய்வு நடந்து வருகிறது. மாணவர்கள் அனைவரும் சேர்ந்த பின்னர் உடல் கூறியல், உடல் இயங்கியல் உள்பட 3 பாடப்பிரிவுகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story