விவசாயியை கத்தியால் குத்த முயன்ற 3 பேருக்கு தர்ம அடி
வடமதுரை அருகே விவசாயியை கத்தியால் குத்த முயன்ற 3 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சுப்பாகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 36). விவசாயி. இவருக்கும், கெச்சானிபட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் தனசேகரன் நேற்று காலை கெச்சானிபட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே அங்கு சுரேஷ்குமார், தனது 2 நண்பர்களுடன் வந்தார். அப்போது சுரேஷ்குமாருக்கும், தனசேகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தனசேகரனை கத்தியால் குத்த முயன்றார். இதனால் அவர் அபயகுரல் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கத்தியால் குத்த முயன்றவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுரேஷ்குமாரின் நண்பர்கள் 2 பேரும் சிக்கினர். பின்னர் அவர்களை பொதுமக்கள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் எரியோட்டில் பதுங்கிய சுரேஷ்குமாரை விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள், அவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாரின் நண்பர்கள் கரூர் மாவட்டம் பில்லூரை சேர்ந்த தீபக்கண்ணன் (24), கோவிலூர் அருகே உள்ள ஆவுலகவுண்டனூரை சேர்ந்த முத்துக்குமார் (22) என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் கண்ணன், முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story