27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்


27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
x
தினத்தந்தி 7 Feb 2022 11:42 PM IST (Updated: 7 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15ந்தேதி முதல் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15ந்தேதி முதல் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்ய 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பட உள்ளது. 

அதன்படி, அரக்கோணம் தாலுகாவில் செய்யூர், இச்சிப்புத்தூர், சோகனூர், பள்ளூர், தக்கோலம், சோளிங்கர் தாலுகாவில் சோளிங்கர், கேசவனாங்குப்பம், கொடைக்கல், போலிப்பாக்கம், ஆற்காடு தாலுகாவில் வளையாத்தூர், அரும்பாக்கம், புதுப்பாடி குட்டியம், குப்பிடிசாத்தம், மேல் புதுப்பாக்கம், கீழ்ப்பாடி, நெமிலி தாலுகாவில் சிறுகரும்பூர், ஆயர்பாடி, சிறு வளையம், பாணாவரம், அகவலம், ஜாகீர் தண்டலம் கண்டிகை, கோடம்பாக்கம், பனப்பாக்கம், சயனபுரம், வாலாஜா தாலுகாவில் அம்மூர், ஆயிலம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி

இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இணையவழி மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். 

அதன் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் மேற்கண்ட 27 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் பெறலாம்.

மேலும் நவரை பருவம் முடியும் காலத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்திட மேலும் பல இடங்களில் இரண்டாம் கட்டமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story