வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 819 வேட்பாளர்கள் போட்டி


வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 819 வேட்பாளர்கள் போட்டி
x
தினத்தந்தி 7 Feb 2022 11:48 PM IST (Updated: 7 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 819 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 819 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 277 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். 

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி முடிவடைந்தது. 

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 234 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 105 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 79 பேரும், திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு 89 பேரும் என்று மொத்தம் 1,147 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 49 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,147 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பாளர்கள் மனுவை வாபஸ்பெற நேற்று கடைசி நாளாகும். இதையொட்டி பல வேட்பாளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

819 பேர் போட்டி

அதன்படி, வேலூர் மாநகராட்சியில் 115, குடியாத்தம் நகராட்சியில் 61, பேரணாம்பட்டு நகராட்சியில் 7, ஒடுகத்தூரில் 31, பென்னாத்தூரில் 36, பள்ளிகொண்டாவில் 13, திருவலத்தில் 14 என்று மொத்தம் 277 பேர் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 
வேலூர் மாநகராட்சியில் 354 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 165 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 97 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 38 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 64 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 52 பேரும், திருவலம் பேரூராட்சியில் 49 பேரும் என்று மொத்தம் 819 பேர் போட்டியிடுகிறார்கள்.

வேலூர் மாநகராட்சி 7,8 வார்டு தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story