மனுவை வாபஸ்பெறக் கூறியதால் தி.மு.க. வேட்பாளர் குடும்பத்துடன் சாலை மறியல். வாகனங்கள் முன் பாய்ந்து மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
வந்தவாசி நகராட்சியில் மனுதாக்கல் செய்தபிறகு மனுவை வாபஸ்பெற கூறியதால் தி.மு.க.வேட்பாளர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டார். அப்போது அவரது மனைவி வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சியில் மனுதாக்கல் செய்தபிறகு மனுவை வாபஸ்பெற கூறியதால் தி.மு.க.வேட்பாளர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டார். அப்போது அவரது மனைவி வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்புமனு தாக்கல்
வந்தவாசி நகராட்சி 22-வது வார்டு கெஜலட்சுமி நகரில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 48). இவர் நகராட்சி 22-வது வார்டு வட்ட தி.மு.க. பிரதிநிதியாக உள்ளார். வந்தவாசி நகராட்சி வேட்பாளர் பட்டியலில் 22-வது வார்டு வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 22-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட நகராட்சி அலுவலகத்தில் இவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் 22-வது வார்டு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திடீரென ஒதுக்கப்பட்டு விட்டதால், வேட்புமனுவை வாபஸ் பெறும்படி தி.மு.க. தரப்பிலிருந்து மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவிக்கவே வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
சாலைமறியல்
இதிலும் வேட்புமனுவை வாபஸ் பெறும்படி மகேந்திரன் வற்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி, எம்.எல்.ஏ. அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அப்போது, மகேந்திரனின் மனைவி பாக்கியலட்சுமி இருமுறை அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமாருக்கும், மகேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் உரிய பதில் அளிப்பதாக கூறிவிட்டு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கு வந்த வந்தவாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மகேந்திரன் குடும்பத்தினரை சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மேலும் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல் வைக்காததால் அங்கு வார்டு ஒதுக்கீடு பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று எம்.எல்.ஏ. அலுவலகம் திறந்திருந்ததை அறிந்த தேர்தல் அலுவலர், அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story