புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 1:01 AM IST (Updated: 8 Feb 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உயிர் பலிவாங்க காத்திருக்கும் மின்மாற்றி
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம்,  தூத்தூர் கிராமத்தில் மயானம் மற்றும் கொள்ளிடம் செல்லும் சாலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது.  அந்த மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அருகிலேயே நெல்வயல் உள்ளது. நெல் அறுவடைக்கு தயாராகும் போது நெல் அறுவடை எந்திரம் அந்த வழியே செல்ல வேண்டும். அப்போது அதில் மின்கம்பிகள் உரசி விடாமல் இருக்க வேண்டும். அப்படி பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  சாய்வாக உள்ள மின்மாற்றியை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜா, தூத்தூர்.
இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைகள் நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், இறைச்சி உள்ளிட்ட கழிவுகளையும், பெருங்களூர் கடை வீதிகளில் உள்ள ஓட்டல்களில் பயன்படுத்தி கோழி இறைச்சி கழிவுகளையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, அதனை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், பெருங்களூர்.
குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டர் பின்புறம் தென்கரை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஓரம் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. வாய்க்காலில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தொற்று நோய் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குளித்தலை.
வேகத்தடை அமைக்க வேண்டும் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் சந்தைபேட்டை மெயின் ரோட்டின் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி   அமைந்துள்ளது. 6-ம் வகுப்பு முதல்  பிளஸ்-2 வரை ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் அப்பகுதி சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி.


Next Story