டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச்சென்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச்சென்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாயை கவ்விச்சென்றது
டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சியில் கம்பனூர் காலனி பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிச்சாமி. விவசாயி. இவர் வீட்டில் காவலுக்காக நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிச்சாமி தூங்க சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து வாசலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே மாரிச்சாமி தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து டார்ச் லைட் அடித்து பார்த்தார். அங்கு நாயை காணவில்லை. மேலும் நாய் நின்றுகொண்டு இருந்த இடம் அருகே ஏதோ ஒரு மர்மவிலங்கின் கால்தடங்கள் பதிவாகியிருந்தது. இதனால் நாயை மர்ம விலங்கு கவ்விச்சென்றது தெரிய வந்தது.
சிறுத்தை
இதுகுறித்து அவர் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பதிவான கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகியிருந்தது சிறுத்தையின் கால்தடம் என்பது உறுதியானது.
மேலும் வனத்துறையினர் கூறும்போது, ‘கம்பனூர் காலனி வனப்பகுதியையொட்டி உள்ளதால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே காட்டை சுற்றி வனவிலங்குகள் வருவதை தடுக்க அகழி அமைக்கப்பட்டு்ள்ளது. நேற்று முன்தினம் இரவு நாய் அகழியை விட்டு வெளியே வந்திருக்கலாம். அதே நேரம் அங்கு வந்த சிறுத்தை நாயை கவ்விச்சென்று இருக்கலாம்’ என்றார்கள்.
எச்சரிக்கை
இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகே தான் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியின் போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அந்த கேமராவிலும் சிறுத்தை நடமாடுவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாயை சிறுத்தை தான் கவ்விச்சென்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் வனப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வதை தவிர்ப்பதோடு, இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story