இந்து முன்னணி நிர்வாகியை கொல்ல முயற்சி; 7 பேர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகியை கொல்ல முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். விவசாயியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவில் மோட்டார் சைக்கிளில் உறவினருடன் சென்றபோது, அனவன்குடியிருப்பு அருகில் வழிமறித்த மர்ம கும்பல் திடீரென்று அவர்கள் 2 பேர் மீதும் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றது. அவர்கள் கூச்சலிட்டதால், பால்ராஜிடம் செல்போனை பறித்த கும்பல், மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விக்கிரமசிங்கபுரம் பகுதி-2-ல் கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) பணியாற்றும் அடச்சாணியைச் சேர்ந்த முத்துகுமார் (32) மீது பால்ராஜ் அடிக்கடி புகார் மனு அளித்ததாக கூறி, அவரது தூண்டுதலின்பேரில், கும்பல் பால்ராஜை மிரட்டியது தெரிய வந்தது. இதுதொடர்பாக முத்துகுமார் மற்றும் ஊர்க்காடு பாலசுப்பிரமணியன் (40), நந்தன்தட்டை கதிர்வேல் (27), முக்கூடல் இம்மானுவேல் ஞானபிரவீன் (19), வீரவநல்லூர் பார்த்திபன் (26), பாப்பாக்குடி மகேஷ் (31) உள்பட 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story