மாவட்டத்தில் 313 கவுன்சிலர் பதவிகளுக்கு 1,702 பேர் போட்டி
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 313 கவுன்சிலர் பதவிகளுக்கு 1,702 பேர் போட்டியிடுகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 313 கவுன்சிலர் பதவிகளுக்கு 1,702 பேர் போட்டியிடுகின்றனர்.
மாநகராட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகளில் 78 வார்டுகள், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, ஏ.வெள்ளாளபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை என 9 பேரூராட்சிகளில் உள்ள 144 கவுன்சிலர்கள் என மொத்தம் 322 கவுன்சிலர்கள் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 347 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 5-ந் தேதி நடந்தது. அதில் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மீதமுள்ள 2 ஆயிரத்து 313 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். கட்சிகளின் வேட்பாளர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த கட்சியின் மாற்று வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்படும். அதன்படி அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர் மனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அது தவிர சிலர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்று கொண்டனர். சில வார்டுகளில் அதிகமானோர் மனுக்களை வாபஸ் வாங்கியதால் 9 பேரூராட்சி வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி பட்டியல்
அதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள 322 வார்டுகளில் 313 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. அதில் மொத்தம் 1,702 பேர் போட்டியிடுகின்றனர். அதன் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 815 பேர் போட்டியிடுகின்றனர். மண்டலம்-1க்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு 198 பேரும், மண்டலம்-2க்கு உட்பட்ட 25 வார்டுகளுக்கு 198 பேரும், மண்டலம்-3க்கு உட்பட்ட 25 வார்டுகளுக்கு 201 பேரும், மண்டலம்-4க்கு உட்பட்ட 26 வார்டுகளுக்கு 218 பேரும் போட்டியிடுகின்றனர். அதில் அதிகபட்சமாக 88-வது வார்டில் 13 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கு அடுத்தப்படியாக 24, 39, 57 ஆகிய வார்டுகளில் தலா 12 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக 46-வது வார்டில் வெறும் 4 பேர் தான் போட்டியிடுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் உள்ள 78 வார்டுகளுக்கு 335 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேரூராட்சிகளில் 144 கவுன்சிலர்கள் பதவிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு ஆனதால் மீதமுள்ள 135 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுக்கள் பணி முடிவடைந்து இறுதி பட்டியல் தயார் ஆகி விட்டதால், இனி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்குவார்கள்.
Related Tags :
Next Story