கிரானைட் மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை, பிப்.8- கிரானைட் மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
கிரானைட் மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கிரானைட்
மதுரை மாவட்டம் சருகுவலையபட்டியில் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் எடுக்க பெரியசாமி என்பவருக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அனுமதியை மீறி அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டதாக, பெரியசாமி உள்பட 13 பேர் மீது கீழவளவு போலீசார் வழக்குபதிவு செய்து மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பெரியசாமி, பாபு என்ற கிருஷ்ணமூர்த்தி, அருண்ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
ரத்து செய்ய முடியாது
இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி ஓடை புறம்போக்கு, அரசு நன்செய் நிலம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். வாகனங்கள் செல்வதற்காக அரசு புறம்போக்கு நிலங்களை சேதப்படுத்தியுள்ளனர். ரூ.118 கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கிரானைட் முறைகேடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறப்பு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்கு ஆவணங்களும், முகாந்திரமும் போதுமானதாக உள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story