நீட்தேர்வு விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை-அண்ணாமலை பேச்சு
நீட் தேர்வு விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை என்று சேலத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சேலம்:
நீட் தேர்வு விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை என்று சேலத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
பா.ஜனதா கட்சியின் சேலம் மாநகராட்சி மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகரில் கடுமையான போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். உள்ளாட்சியிலும் வர கட்சியினர் பாடுபட வேண்டும். மத்திய ஆட்சியில் பிரதமரின் 8 ஆண்டு கால திட்டங்கள் சாமானிய மக்களை சென்றடைந்து உள்ளது. முத்ரா திட்டம் மூலம் தமிழகத்தில் 72 சதவீத பெண்கள் கடன் பெற்று பெற்றுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள்
பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் வாழ்க்கை திறனை மாற்றி உள்ளது. இதனால் வாக்கு சேகரிக்க செல்லும் உங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் 74 சதவீத மக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ளனர். எனவே வேட்பாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த 517 வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் மத்திய அரசிடம் விரோத போக்கை கடைபிடித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மன்றம்
பா.ஜனதா கட்சியின் சமூக நீதியான நீட் தேர்வு மூலமாக ஏழை-எளிய மாணவர்கள் உள்பட பலரும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதை பார்த்து தி.மு.க.விற்கு கோபம் வருகிறது. கடந்த ஒரு வாரமாக மு.க.ஸ்டாலின் பா.ஜனதா பற்றி தான் பேசி வருகிறார். தமிழகத்தில் போட்டியின்றி 3 வார்டுகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசு தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து அதற்கு 60 சதவீத பணத்தையும் கொடுத்து சிறப்பு செய்துள்ளது. ஒரு பக்கம் சமூக நீதி நீட் மூலமாகவும், இன்னொரு பக்கம் சமூக நீதி மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்துவதன் மூலமாகவும் இருக்கிறது. நீட் தேர்வு குறித்து எத்தனை முறை எதிர்கட்சிகள் பேசினாலும் மக்கள் மன்றத்தில் எடுபடாது.
எனவே நீட் தேர்வு விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை. அதே போல் நாம் எந்த ஊழலும் செய்யவில்லை. எனவே எந்த கட்சியையும், எந்த பணத்தையும் பார்த்து பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story