திருப்பூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு
அணைகள், ஆறுகள் இருந்தும் திருப்பூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு
பின்னலாடை நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தினரும் அதிகமாக இங்கு தங்கி பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றாவது குடிநீர் திட்டம், 2 வது குடிநீர் திட்டம் மற்றும் 3வது குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 4வது குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநகரின் மையப்பகுதிகளில் அதிகமான தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டாலும், சுற்றுப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் மிக குறைந்த அளவில் உள்ளது. 10, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது கோடை காலம் தொடங்குவதால் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் குடிநீர் தட்டுப்பாடு, இந்த ஆண்டு தற்போதே தொடங்கியுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக பெரும்பாலான குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதும் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், லாரிகள் மூலமும் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாநகரின் மையப்பகுதியான செல்லாண்டியம்மன் படித்துறை, ஜம்மனை ஓடைப்பகுதி, ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படாததால் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீருக்காக குடங்களை எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. ஈஸ்வரன் கோவில் அருகில், ஜம்மனை ஓடை பாலம், நடராஜ் தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இருந்து கசியும் தண்ணீைர பிளாஸ்டிக்பைகளை கட்டி பொதுமக்கள் குடங்களில் சேகரித்து செல்வதை காணமுடிகிறது.
திருப்பூர் மாநகரில் கோடை தொடங்கும் நிலையில் தற்போதே ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related Tags :
Next Story