ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழக அரசின் உயர்மட்டக்குழு வருகை


ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழக அரசின் உயர்மட்டக்குழு வருகை
x
தினத்தந்தி 8 Feb 2022 7:24 PM IST (Updated: 8 Feb 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழக அரசின் உயர்மட்டக்குழுவினர் வருகை தந்துள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசின் உயர்மட்டக்குழு நேற்று வந்தது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி காரணமாக 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனை தொடர்ந்து ஆலைக்கு `சீல்' வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆலையை திறக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோன்று வாரம்தோறும் சுற்று வட்டார கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆலை வளாகத்தில் எந்திரங்கள் பழுதடைந்து கசிவு ஏற்படுவதாகவும், பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
உயர்மட்டக்குழு
இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா, ஏதேனும் சேதம் அடைந்து உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு உயர் மட்டக்குழுவை அமைத்து உள்ளது. அதன்படி சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆர்.விஜயபாஸ்கரன் தலைமையில், மதுரை தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பிரிவை சேர்ந்த இணை இயக்குனர் (பதிவாளர்) ஆர்.ரவிச்சந்திரன், மதுரை தீயணைப்பு படை துணை இயக்குனர் என்.விஜயகுமார், அண்ணா பல்கலைக்கழக சிவில் என்ஜினீயரிங் பேராசிரியர் ஆர்.செந்தில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வி.சம்பத், நெல்லை மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.விஜயலட்சுமி ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவை சேர்ந்த உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட சுற்றுச்சூல் பொறியாளர் சத்தியராஜ், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிறைமதி, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ், வணிகவரித்துறை அலுவலர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
பின்னர் உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட அளவிலான குழுவினருடன், தாமிர உருக்கு ஆலை எந்திரங்கள் நிலை, வளாகத்தில் மழைநீர் தேங்கியதா, ஏதேனும் ரசாயண கழிவுகள் கசிவு ஏற்பட்டு உள்ளதா, கட்டிடங்கள் உறுதியாக பாதுகாப்பானதாக உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து உயர்மட்டக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று நேரில் ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை வரை குழுவினர் ஆலைக்கு செல்லவில்லை.
எனவே, உயர்மட்டக் குழுவினர் ஆலையில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆய்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story