நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2022 8:32 PM IST (Updated: 8 Feb 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, மற்றும் திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளும், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கான 51 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்கு எந்திரங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இங்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் நாளான வருகிற 22-ந் தேதியன்று எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் தேர்தல் கண்காணிப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story