உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 8:47 PM IST (Updated: 8 Feb 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

291 இடங்களுக்கு தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் அதிகரட்டி, பிக்கட்டி, கேத்தி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலா ஒருவர் என 3 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

எனவே இதை தவிர்த்து 291 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 4 நகராட்சி களில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

கடந்த ஜனவரி 5-ந் தேதி நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக மொத்தம் 495 வாக்குப்பதிவு எந்திரங்கள், 495 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு தனித்தனியாக ஊட்டி கேரளா கிளப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 

எந்திரங்கள் ஒதுக்கீடு 

இந்தநிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2-வது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

போட்டியின்றி தேர்வான 3 வார்டுகளில் தேர்தல் நடைபெறாததால், 4 எந்திரங்கள் எடுக்கப்பட்டு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

ஊட்டி நகராட்சியில் 82 வாக்குச் சாவடிகளுக்கு 99 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கேரளா கிளப்பில் இருந்து தங்களது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து சென்றனர். 

போலீஸ் பாதுகாப்பு

15 உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட அறைகளில் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப் பட்டது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை 3-வது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக எந்திரங்கள் பிரிக்கப் படுகிறது. 

தொடர்ந்து வேட்பாளர்கள் பெயர், சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நடக்கிறது என்றனர்.


Next Story