நீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் தெரிவித்து உள்ளாா்.
ஊட்டி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் தெரிவித்து உள்ளாா்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாகன சோதனையின்போது, தாங்கள் சோதனையிடும் வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
15 உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் வாகன சோதனையை வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
கூடுதல் பாதுகாப்பு
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு வாகன அனுமதி விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்க வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்களை போலீசார் அனுமதிக்க கூடாது. அமைதியான முறையில் தேர்தல் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்) குணசேகரன், கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story