பெருமாள் கோவில்களில் ரதசப்தமி விழா


பெருமாள் கோவில்களில் ரதசப்தமி விழா
x
தினத்தந்தி 8 Feb 2022 9:55 PM IST (Updated: 8 Feb 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மற்றும் செஞ்சி பெருமாள் கோவில்களில் நடந்த ரதசப்தமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டும் ரதசப்தமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

7 வாகனங்களில் வலம்

அதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் வைகுண்டவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 10.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், பகல் 12.30 மணிக்கு கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
அதன் பிறகு மாலை 4 மணிக்கு இந்திர விமானத்திலும், 5.30 மணிக்கு கற்பக விருட்சத்திலும், 6.30 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இவை முடிந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

செஞ்சி

செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் மலைமீது ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரதசப்தமி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாத பெருமாள் காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10 மணிக்கு கருடசேவை வாகனத்திலும், பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார். இதையடுத்து 1 மணிக்கு விசேஷ அலங்காரம்  மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4 மணிக்கு யானை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story