திருச்செங்கோட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு


திருச்செங்கோட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:57 PM IST (Updated: 8 Feb 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி தேர்தல்
திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்காக நகராட்சி பகுதியில் 23 மையங்களில் 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 மையங்களில் உள்ள 21 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 
இந்தநிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு ஆலோசனை
அவர், திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் உள்ள தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு குமரன் கல்வி நிலையம், நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சட்டையம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சூரியம்பாளையம் நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார். 
அப்போது, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்காளர்களின் வசதிக்காக பந்தல் அமைப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும் என்றார். 
ஆய்வின்போது, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story