திருப்பத்தூர் அருகே வாலிபர் சாவில் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் சாலை மறியல்


திருப்பத்தூர் அருகே வாலிபர் சாவில் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2022 12:20 AM IST (Updated: 9 Feb 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நடந்த வாலிபர் சாவில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்துார்

திருப்பத்தூர் அருகே நடந்த வாலிபர் சாவில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் சாவு

திருப்பத்துார் மாவட்டம், மட்றப்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நவீன் குமார் (வயது 29). முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விசித்ரா (24). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை நவீன் குமாரை அவரது  நண்பர் சீனிவாசன் (26) என்பவர் கட்டாயப்படுத்தி மது குடிக்க  அழைத்துச் சென்றுள்ளார். 

மது குடித்த சிறிது நேரத்திலேயே நவீன் குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்தார். உடனே அவரை சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் நவீன் குமாரை அவரது வீட்டிற்கு கொண்டுச்சென்றனர். அன்று மாலை நவீன் குமார் இறந்துவிட்டார். மது குடித்ததில் இறந்துவிட்டதாக நினைத்து அவரது உடலை பெற்றோர் அடக்கம் செய்து விட்டனர்.

உறவினர்கள் மறியல்

இந்தநிலையில் விசித்ரா சீனிவாசனுடன் பலமுறை செல்போனில் பேசியதால் தனது மகன்சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விசித்ரா மீது திருப்பத்துார் தாலுகா போலீசில் புகாரளித்தார். 

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், விசித்ராவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், இன்ஸ்பெக்டர் திருமால் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story