தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது
பூதப்பாண்டி மேலத்தெருவில் இருந்து பட்டார்குளம் காலனிக்கு திரும்பும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்குழாய் உடைந்து தண்ணீர் வீணாக கழிவுநீர் ஓடையில் பாய்ந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் நில்தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள பாலம் பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஓடையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையில் கழிவு நீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கிளாட்சன், நில்தெரு, நாகர்கோவில்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சி 51-வது வார்டுக்குட்பட்ட காமச்சன்பரப்பு பகுதியில் ஒரு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள், செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடிகள்,குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.ஜெயக்குமார், உடையப்பன்குடியிருப்பு.
காத்திருக்கும் ஆபத்து
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையின் இருபுறமும் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. வலதுபுறத்தில் அமைந்துள்ள நடைபாதையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் சுவிட்சு பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில், ஒயர்கள் நடந்து செல்பவர்கள் மீது உரசும்படியாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பெட்டியை அகற்றி பாதுகாப்பான புதிய சுவிட்சு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், கோட்டார்.
தெருவிளக்கு எரியவில்லை
கீழ ஆசாரிபள்ளம் 13-வது அன்பியம் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.
விபத்து அபாயம்
கருங்கல் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வெளியே செல்லும் பகுதியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்குமாரி, கருங்கல்.
மாசடையும் தண்ணீர்
மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் நேதாஜி படிப்பகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் பக்கச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. ஓடையில் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால், அவை ஊற்றெடுத்து அருகில் அமைந்துள்ள கிணறுகளில் கலக்கிறது. இதனால், கிணற்று தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த ஓடையின் பக்கச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், வெட்டுவெந்நி.
Related Tags :
Next Story