களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானவருக்கு பரோல் குமரி-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு
களியக்காவிளையில சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதானவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
களியக்காவிளை,
களியக்காவிளையில சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதானவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கொலை
களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வில்சன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் வில்சனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விசாரணையில் இதில் பல்வேறு தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
குமரியை சேர்ந்தவர் கைது
இந்த கொலை சம்பவத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் களியக்காவிளையை அடுத்த ஐங்காமம் பகுதியை சேர்ந்த செய்யது அலி (வயது 40) என்பவர் போலி முகவரி மூலம் குற்றவாளிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் என்.ஐ.ஏ. சிறப்பு புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்காக சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
4 நாட்கள் பரோல்
இந்தநிலையில், செய்யது அலியின் தந்தை இறந்ததை அடுத்து அவருக்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து களியக்காவிளை அடுத்த கேரளா பகுதியான ஐங்காமம் பகுதிக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
இதையொட்டி நேற்று குமரி-கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் தமிழக போலீசாரும், கேரளா எல்லை பகுதியில் கேரளா போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் போலீஸ் குவிப்பால் களியக்காவிளை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Related Tags :
Next Story