மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 77, அ.தி.மு.க. 100 வார்டுகளிலும் போட்டி


மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 77, அ.தி.மு.க. 100 வார்டுகளிலும் போட்டி
x
தினத்தந்தி 9 Feb 2022 2:41 AM IST (Updated: 9 Feb 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 77, அ.தி.மு.க. 100 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

மதுரை
மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 77, அ.தி.மு.க. 100 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
815 பேர் போட்டி
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 100 வார்டுகளுக்கு மொத்தம் 815 பேர் போட்டியிடுகின்றனர். மண்டலம்-1 க்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு 198 பேரும், மண்டலம்-2க்கு உட்பட்ட 25 வார்டுகளுக்கு 198 பேரும், மண்டலம்-3க்கு உட்பட்ட 25 வார்டுகளுக்கு 201 பேரும், மண்டலம்-4க்கு உட்பட்ட 26 வார்டுகளுக்கு 218 பேரும் போட்டியிடுகின்றனர். அதில் தி.மு.க. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
எனவே 100 வார்டுகளில் தி.மு.க. 77 வார்டுகளில் மட்டுமே போட்டியிடுகிறது. மற்ற வார்டுகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். அதன்படி காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 8 வார்டுகளிலும், இ.கம்யூனிஸ்டு கட்சி ஒரு வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க. 3 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதில் தொகுதி உடன்பாட்டின் போது காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அதில் 77-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் முன்மொழிபவர் இல்லாமல் மனு தாக்கல் செய்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
பா.ஜனதா-99
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்கள் 100 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர். அதே போல் பாரதீய ஜனதா கட்சியும் தனித்து தேர்தலை சந்திக்கிறது. அந்த கட்சி 99 இடங்களில் போட்டியிடுகின்றது. விஜயகாந்தின் தே.மு.தி.க.வினர் 61 வார்டுகளிலும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 84 வார்டுகளிலும், சீமானின் நாம் தமிழர் கட்சினர் 98 வார்டுகளிலும், கமலின் மக்கள் நீதி மய்யம் 91 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சியினர் 11 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். 157 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.

Next Story