சத்தி நகராட்சியில் ெவற்றிக்கனியை பறிப்பது யார்?


சத்தி நகராட்சியில் ெவற்றிக்கனியை பறிப்பது யார்?
x
தினத்தந்தி 9 Feb 2022 2:46 AM IST (Updated: 9 Feb 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

சத்தி நகராட்சியில் ெவற்றிக்கனியை பறிப்பது யார்?

சத்தியமங்கலம் என்றால் அதை கேட்கும் அனைவருக்கும் ஒவ்வொரு கற்பனை கண்ணுக்குள் புலப்படும். காடு, மலை, யானை, புலி, சிறுத்தை, சந்தனம் என்று பல எண்ணங்கள் உதிக்கும். சத்தியமங்கலம் என்றால் சத்தியத்துக்கு கட்டுப்பட்ட ஊர் என்கிறார்கள் அந்த ஊர் பெரியவர்கள். சுற்றிலும் காட்டுப்பகுதி என்றாலும் நகருக்குள் எந்த காட்டு விலங்கும் வந்து அட்டகாசம் செய்ததாக சத்தியமங்கலம் பகுதி மக்கள் புகார் அளிக்காத நிலை இருப்பதால் பெரியவர்கள் கூறும் சத்தியத்துக்கு கட்டுப்பட்ட ஊர் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். 
 பண்ணாரி அம்மன் பார்வை
பண்ணாரியில் இருந்து கொண்டு பண்ணாரி அம்மன் பார்வை படும் வகையில் அமைந்திருக்கும் நகர் என்பதும் இதன் சிறப்பு. கிறிஸ்தவ மறை பரப்பு பணிக்காக புனித அருளானந்தர் என்கிற ஜான் டி பிரிட்டோ வந்து சென்ற மண்ணை ஒட்டியது சத்தியமங்கலம் என்பதுவும் சிறப்பு. திப்புசுல்தான்அடிக்கடி வந்து சென்ற மண் என்பதும் அவர் நினைவாக இன்றும் திப்புசுல்தான் ரோடு புழக்கத்தில் இருக்கிறது என்பதும் சத்தியமங்கலத்தின் பெருமை.
பொதுவாக ஆறுகள் ஓடினால் அந்த பகுதியின் 2 கரைகளும், 2 பெரிய நகரங்களாக எழுவது இயல்பு. ஆனால் வற்றாத ஜீவநதியாகிய பவானி ஆற்றை நகரின் நடுவில் பாயவிட்டு, 2 புறங்களும் சத்தியமங்கலம் என்ற ஒற்றை பெயரால் எழுந்து நிற்பதுவும் சத்தியமங்கலத்தின் சிறப்பு. 
நகராட்சி அந்தஸ்து
இப்படி சிறப்புகளை அள்ளிக்கொண்டே செல்லும் சத்தியமங்கலம் நகராட்சி சிறிய ஒரு கிராமமாக இருந்து. பின்னர் பேரூராட்சியாக மாறி, நகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டில்தான் சத்தியமங்கலம் நகராட்சி தரம் உயர்ந்தது. 27 வார்டுகளுடன் கூடிய இந்த நகராட்சியில் தற்போதைய வாக்காளர்கள் 33 ஆயிரத்து 86 பேர். இதில் ஆண்கள் 15 ஆயிரத்து 911 பேர். பெண்கள் 17 ஆயிரத்து 168 பேர், 3-ம் பாலினத்தவர்கள் 7 பேர் உள்ளனர்.
சத்தியமங்கலம் நகராட்சி முதன் முதலில் தேர்தலை சந்தித்த ஆண்டு 1986-ம் ஆண்டு ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இருந்த எஸ்.கே.பழனிச்சாமி வெற்றி பெற்றார். சத்தியமங்கலத்தின் முதல் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றார். தையல் கலை தொழிலாளியாக இருந்து தலைவராக உயர்ந்தார்.அவருக்கு பின்னர் 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.ஏ.சலீம் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டிலும் எஸ்.ஏ.சலீம் வெற்றி பெற்று தலைவர் பணியை தொடர்ந்தார்.
வளர்ச்சி திட்டங்கள்
 2006-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.வேலுச்சாமி வெற்றி பெற்று தலைவர் ஆனார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஓ.எம்.சுப்பிரமணியம் வெற்றி பெற்றார். பின்னர் இப்போதுதான் சத்தியமங்கலம் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது .இதுவரை வெற்றி பெற்ற தலைவர்கள் அல்லது பதவி வகித்த தலைவர்கள் வரிசையை பார்த்தால் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என்று முக்கிய கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளன. இப்போது தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுடன், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும ்பலப்பரீட்சையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே பல ஆண்டுகளாக பதவியில் இருந்த தலைவர்கள் சத்தியமங்கலம் நகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செய்து இருக்கிறார்கள். சிறிய பேரூராட்சியாக இருந்து வளர்ச்சி அடைந்த சத்தியமங்கலத்துக்கு பஸ் நிலையம் கொண்டு வந்தது. புதிய அரசு ஆஸ்பத்திரி கொண்டு வந்தது. புதிய தீயணைப்பு நிலையம் கொண்டு வந்தது. அனைத்து வீதிகளிலும் கான்கிரீட் தள சாலைகள் அமைத்தது. குடிநீர் திட்டங்கள் மூலம் வீடுகளுக்கும், வீதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்தது என்று பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சிக்கல்
உள்ளாட்சி அமைப்பை பொறுத்தவரை சத்தியமங்கலத்தில் இதுவரை பணியாற்றிய மக்கள் பிரதிநிதிகள் நகரின் வளர்ச்சிக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், சத்தியமங்கலம் நகராட்சி பல தேவைகளில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சத்தியமங்கலம் நகராட்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கிறது. இதுபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்த பகுதி இருக்கிறது. இந்த சிக்கல் வளர்ச்சி திட்டங்களுக்கு சற்று தடையாக இருக்கிறது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த சிக்கலை களைந்து வளர்ச்சி ஏற்படுத்தும் ஒரே அமைப்பாக உள்ளாட்சி அதாவது நகராட்சி அமைப்பு செயல்படும். செயல்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
மலர் சந்தை
சத்தியமங்கலத்தில் மலர் சந்தை தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. நறுமண பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை கோரிக்கையும் கனவாகவே இருக்கிறது. காகித ஆலைகளால் பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. சுற்றிலும் விவசாய நிலங்களை கொண்ட நகராட்சியாக இது உள்ளது. விவசாயம் ஒன்றையே நம்பி வாழும் மக்களை அதிகம் கொண்ட நகர் பகுதியாக இருக்கிறது. ஓடைகளை தூர்வார வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்ய வேண்டும். பவானி ஆற்றை பாதுகாக்க வேண்டும். பஸ் நிலையத்தில் கூடுதல் வசதி வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் கையில் வைத்து இருக்கிறார்கள்.
காத்திருப்பு
இங்குள்ள 27 வார்டுகளின் மக்கள் பிரதிநிதிகளாக, தேர்ந்து எடுக்கப்பட்ட கவுன்சிலர்களாக பதவியை பிடிக்க 122 பேர் போட்டியில் உள்ளனர். சத்தியமங்கலம் நகர் பகுதி நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு வருகிறது. நகராட்சி பகுதியை தாண்டியும் நகர வளர்ச்சி உள்ளது. எனவே அருகில் உள்ள பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் சிலவற்றையும் சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைத்து நகர மக்கள் தொகை, வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் வளர்ச்சித்திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. யார் இந்த நகராட்சியை கைப்பற்றுவது என்று வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகிறார்கள். ஆனால் யார் கைப்பற்றினால் சத்தியமங்கலம் என்ற பெயருக்கு மதிப்பும், மரியாதையும் கூடுதல் வளர்ச்சியும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். சத்தியமங்கலம் நகராட்சியில் வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Next Story