பா ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு சான்று; மாநில தலைவர் அண்ணாமலை


பா ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு சான்று; மாநில தலைவர் அண்ணாமலை
x
தினத்தந்தி 9 Feb 2022 6:15 PM IST (Updated: 9 Feb 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைக்கும் சான்றுஎன்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்

கோவில்பட்டி:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைக்கும் சான்று” என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திட்டங்கள்
தமிழகத்தில், கடந்த 8 ஆண்டுகளாக களத்தினை தயார்படுத்தி, பா.ஜனதா வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளோம். பா.ஜனதா ஆட்சி காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அதேபோல், `தொடரட்டும் நல்லாட்சி' என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால், 8 மாதத்தில் மக்கள் பாதிப்பைதான் சந்தித்துள்ளனர். எல்லா இடத்திலும் கமிஷன் தான் நடக்கிறது.
மத்திய அரசின் முத்ரா திட்டம், ஜல்சக்தி குடிநீர் திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர். 8 வருடத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளது. கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் நாம். 
தேசிய பார்வை
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட  நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன? இதுகுறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பிரசாரம் செய்கிறார்.
`நீட்' டிராமா கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. ஏழை-எளிய மக்கள் `நீட்' தேர்வினால் அதிகம் பயன் பெற்றுள்ளனர். தமிழகம் தேசிய பார்வையை நோக்கி பயணிக்கிறது. தேசியம் என்றால் அது பா.ஜனதா தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது. உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு கிடைக்கும் சான்று.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட பார்வையாளர் தயாசங்கர், மாநில நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சரவண கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் போஸ், ராஜ்குமார், உமாசெல்வி, மாவட்ட செயலாளர்கள் வேல்ராஜா, மாரியப்பன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story