பூத் சிலீப்பில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறக்கூடாது


பூத் சிலீப்பில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறக்கூடாது
x
தினத்தந்தி 9 Feb 2022 7:44 PM IST (Updated: 9 Feb 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

‘பூத் சிலீப்பில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறக்கூடாது’ என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்.

ஊட்டி

‘பூத் சிலீப்பில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறக்கூடாது’ என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஊட்டி நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம், நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான காந்திராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. தலைமை அலுவலர் மூலம் வாக்குச்சாவடி கண்காணிக்கப்படும். வாக்காளர்களை எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க தூண்டக்கூடாது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி கூட்டரங்கம் மற்றும் திறந்தவெளியில் கூட்டம் நடத்தினால் 50 சதவீதம் பேர் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு 20 பேர் குழுக்களாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இணையதளம் மூலம் பிரசாரம் செய்யலாம். வாக்கு கேட்டு போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. ஒரு வேட்பாளருக்கு 2 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அனுமதியின்றி...

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வாகன, ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். ஊட்டி நகராட்சி மூலம் வாக்காளர்களுக்கு பூத் சிலீப் வழங்கப்பட உள்ளது. வேட்பாளர்கள் வழங்கும் பூத் சிலீப்பில் கட்சி சின்னமோ அல்லது வேட்பாளர் பெயரோ இடம்பெறக்கூடாது. தாங்கள் வாக்கு சேகரிக்கும்போது சக வேட்பாளர்கள் குறித்து தவறான எந்த ஒரு அறிவிப்பையும் அச்சிட்டோ அல்லது எழுதியோ வெளியிடக்கூடாது. 

தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள், வாகனம் பறிமுதல் செய்யப்படும். முகவர்கள் வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

ஒத்துழைக்க வேண்டும்

ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பேசும்போது, வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை அல்லது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பது சட்டப்படி குற்றம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எவ்வித பிரச்சனை இன்றி அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று குன்னூர் நகர்மன்ற அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டம் நடந்தது. 


Next Story