கூடலூர் நகரில் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் புத்துயிர் பெறுமா


கூடலூர் நகரில் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் புத்துயிர் பெறுமா
x
தினத்தந்தி 9 Feb 2022 7:45 PM IST (Updated: 9 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் புத்துயிர் பெறுமா? என்று கூடலூர் நகர மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்

10 ஆண்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் புத்துயிர் பெறுமா? என்று கூடலூர் நகர மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

கூடலூர் நகரம்

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
 இந்த நிலையில் கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இணையும் பகுதியாக கூடலூர் நகரம் உள்ளது. 

இந்த வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் கூடலூர் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. இதனால் 10 ஆண்டு கழித்து நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு புதிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?, கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மின்னழுத்த பிரச்சினை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
கூடலூரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக சுற்றுலா சார்ந்த தொழில்கள், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இது தவிர கூடலூர் பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு, பாதியில் விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கக்கூடிய குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு சொந்தமாக கிடங்கு அமைக்கப்படவில்லை. தற்போது தனியார் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். 

சாலை வசதி

இது மட்டுமின்றி கூடலூர் நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவுபடுத்த வேண்டும். 

விவசாயிகளின் விளைபொருள்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேளாண்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள், நடைபாதை, சாலை வசதி மற்றும் சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story